பீகாரின் முன்னாள் முதல்வரான கர்பூரி தாகூருக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அடுத்து, முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கும் பாரத ரத்னா வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பேரனும் ராஷ்ட்ரீய லோக் தள (ஆர்எல்டி) தலைவருமான ஜெயந்த் செளத்ரி, பாஜக உடன் கூட்டணி சேர உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முந்தைய அரசுகள் செய்யாததை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி உள்ளார். இது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப்பெரிய நாள்; மிகவும் உணர்ச்சிகரமான நாள். குடியரசுத் தலைவர், அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட முடிவு இது" எனத் தெரிவித்தார்.
அவரிடம், ’நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளீர்களா’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "என்னால் எவ்வாறு மறுக்க முடியும்? அதேநேரத்தில், தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும் நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்திருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்த்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: மீன்களின் இனப்பெருக்க சத்தம்.. இரவில் உறங்காமல் தவிக்கும் அமெரிக்க மக்கள்!
சரண் சிங்கின் பேரனும் ஆா்எல்டி நிறுவனா் அஜீத் சிங்கின் மகனுமான ஜெயந்த் செளதரி, தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளாா். இவரது கட்சிக்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினா் இடையே குறிப்பிடத்தக்க வாக்குவங்கி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தோ்தலில் சமாஜ்வாதி மற்றும் ஆா்எல்டி கூட்டணியாகப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். சமாஜ்வாதி கட்சி, ஏற்கெனவே I-N-D-I-A கூட்டணியில் உள்ளது. சமாஜ்வாதி அக்கூட்டணியில் இருந்ததால், ராஷ்ட்ரீய லோக் தளமும் அத்துடன் இணைந்திருந்தது.
இந்தச் சூழலில், ஆா்எல்டிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவா் கூறியிருந்தாா். இந்த நிலையில்தான், பாஜக கூட்டணியில் இணையவிருப்பதை ஆா்எல்டி கட்சியின் தலைவர் ஜெயந்த் செளதரி இன்று உறுதி செய்துள்ளார். ஒருவேளை, பாஜகவுடன் ராஷ்ட்ரீய லோக் தளம் இணையும்பட்சத்தில் அக்கட்சிக்கு, உத்தரப்பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளையும் 1 மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: வயதான தம்பதியின் சீட்டை மாற்றிய ஏர் இந்தியா.. ரூ.48 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!