இந்தியா

முஸ்லிம் பெண்களுக்கு பகிரங்கமாக பாலியல் மிரட்டல் - 11 நாட்களுக்கு பிறகு உ.பி சாமியார் கைது

முஸ்லிம் பெண்களுக்கு பகிரங்கமாக பாலியல் மிரட்டல் - 11 நாட்களுக்கு பிறகு உ.பி சாமியார் கைது

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கு பகிரங்கமாக பாலியல் ரீதியில் மிரட்டல் விடுத்த சாமியாரை 11 நாட்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் ஆசிரமத்தின் தலைவராக இருப்பவர் பஜ்ரங் முனி தாஸ். சாமியாரான இவர், அவ்வப்போது சீதாப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து சமயம் குறித்து பிரசாரம் செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2-ம் தேதி அந்தப் பகுதியில் பஜ்ரங் முனி தாஸ் ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது சீதாப்பூர் மசூதிக்கு அருகே சென்ற போது, அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து, "இங்குள்ள இந்து பெண்களுக்கு முஸ்லிம்கள் யாராவது தொல்லை கொடுத்தால், முஸ்லிம் பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்வேன்" என பஜ்ரங் முனி தாஸ் மிரட்டல் விடுத்தார். அவர் இவ்வாறு கூறியதும், அங்கிருந்த சில இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு ஒருவிதமான பதற்றமான சூழல் எழுந்தது. பின்னர், போலீஸார் தலையிட்டு அதனை சரி செய்தனர். 

இதனிடையே, அவரது இந்த வெறுப்பு பேச்சு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். பின்னர், அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக, தேசிய பெண்கள் ஆணையம் பஜ்ரங் முனி தாஸின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று இரவு கைது செய்தனர்.

முன்னதாக, தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் வீடியோ ஒன்றினை பஜ்ரங் முனி தாஸ் வெளியிட்டார். அதில், தான் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், இதில் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.