பாலியல் குற்றங்களுக்கு எதிரான பதாகைகள் pt web
இந்தியா

”வாக்குமூலம் கொடுக்க சென்றபோது நீதிபதியும் அத்துமீறினார்” - பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் புகார்!

திரிபுராவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 23 வயது பெண் ஒருவர், தலாய் மாவட்ட நீதிபதி ஒருவரது அறைக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாரளித்துள்ளார்.

Angeshwar G

திரிபுராவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 23 வயது பெண் ஒருவர், தலாய் மாவட்ட நீதிபதி ஒருவரது அறைக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாரளித்துள்ளார்.

பிப்ரவரி 13 ஆம் தேதி திரிபுராவில் தலாய் மாவட்டத்தில், 23 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 26 வயதுடைய ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிப்ரவரி 15 ஆம் தேதி கச்சுச்சோரா காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடந்த 16 ஆம் தேதி கமால்பூர் முதல்தர நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வதோஷ் தார் அறைக்குச் சென்று தனக்கு நிகழ்ந்த நிகழ்வு குறித்து வாக்குமூலம் கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது நீதிபதியால் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

கமால்பூரின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியிடம் அப்பெண் அளித்துள்ள புகாரில், “பிப்ரவரி 16 ஆம் தேதி எனது வாக்குமூலத்தை பதிவு செய்ய முதல்தர நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அறைக்குச் சென்றேன். பெண் காவலர்கள் வெளியில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். நான் வாக்குமூலம் அளிக்க முயன்ற போது நீதிபதி என்னைத் தொட்டார். நான் அவரது அறையை விட்டு வெளியில் வந்து எனது கணவர் மற்றும் வழக்கறிஞர்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன்” என தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் கமால்பூர் பார் அசோசியேசனில் தனியொரு வழக்கினை பதிவு செய்துள்ளார்.

நீதிமன்றம்

புகாரின் பேரில் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித்தாஸ் என மூன்று பேர் கொண்ட குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட உடனேயே, கமால்பூரில் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அலுவலகத்திற்கு நீதிபதிகள் குழுவினர் சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக அம்மாநிலத்தின் உயர்நீதிமன்ற பதிவாளர் கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ புகார் ஏதும் வரவில்லை. முறையான புகார் கிடைத்ததும் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.