அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வாழ் பெண் பத்திரிகையாளர் ஒருவர் எம்.ஜே.அக்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூ மூலம் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக பணியாற்றி வந்தவர் எம்.ஜே.அக்பர். இவர் பல ஆண்டு காலம் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். இவர் பத்திரிகையாளராக இருந்த நேரத்தில் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் எழுந்தது. 10-க்கும் அதிகமான பெண்கள் #MeToo மூலம் அக்பருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து பாலியல் புகாருக்குள்ளான எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. குற்றச்சாட்டுக்களை மறுத்த போதிலும், நெருக்கடி அதிகரிக்கவே தனது பதவியை எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார். சட்ட ரீதியாக புகார்களை அணுக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வாழ் பெண் பத்திரிகையாளர் ஒருவர் எம்.ஜே.அக்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூ மூலம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில், தன்னுடைய இளம் வயதில் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கிய நேரத்தில் தன்னிடம் எப்படியெல்லாம் அக்பர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது குறித்து பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.
45 வயதுடைய அந்தப் பெண் பத்திரிகையாளர் தன்னுடைய 23வயதில் தனக்கு நேர்ந்த அந்தக் கொடுமைகள் குறித்து வெளிப்படுத்தும் அளவிற்கு அப்போது தைரியம் இல்லை என்றும் அப்போதே அக்பர் மிகவும் அதிகாரமிக்க பத்திரிகையாளராக இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது, பலரும் வெளிப்படையாக மீடூவில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதால் தானும் இதனை கூறுவதாக தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டை அடுத்து, தன்னுடைய கணவர் மீதான பாலியல் புகார்கள் குறித்து அக்பரின் மனைவி மல்லிகா முதன்முறையாக பேசியுள்ளார். “என் கணவர் மீது மீ டூ விவகாரத்தில் பலரும் சரமாரியாக பாலியல் புகார்களை தெரிவித்து வந்த போதும், இதுநாள் வரையிலும் நான் அமைதி காத்து வந்தேன்.
இப்போது என்னுடைய கணவர் பாலியல் அத்துமீறல் செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் பல்லவி கோகாய் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், என்னையும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை. 20 வருடங்களுக்கு முன்பு, என்னுடைய கணவர் இரவு நேரங்களில் பல்லவியுடன் அதிக நேரம் போனில் பேசுவார். அதேபோல், நான் இருக்கும் போதே பொது இடங்களில் அவர்கள் அதிகம் நெருக்கமாக இருப்பார்கள். அவருடைய நெருக்கமான உறவால், என்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையே வேதனையில் ஆழ்த்தினார். நாங்கள் மிகவும் காயப்பட்டிருந்தோம்.
அவர்கள் பணிபுரிந்த பத்திரிகையின் விருந்து எங்கள் இல்லத்தில்தான் நடக்கும். அப்போது, இளம் பத்திரிகையாளர் முன்னிலையில் அவர்கள் ஒன்றாக நடனமாடுவதை அவமானத்துடனும், வலியுடனும் நான் பார்த்திருக்கிறேன். நான் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றேன். அவர் பிறகு குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அவர் முடிவு செய்தார்.
உஷிதா படேல் மற்றும் பல்லவி கோகாய் அடிக்கடி எங்கள் வீட்டில் சந்தோஷமாக மது அருந்துவார்கள். எங்களுடன் இணைந்து இரவு உணவு அருந்துவார்கள். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் போல் அவர் அன்று இல்லை. இப்படியொரு பொய்யை என்னுடைய கணவர் மீது அவர் சொல்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், அவர் சொல்வதில் பொய் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.