இந்தியா

கேரள பாதிரியார் விவகாரம் : பாலியல் புகாரளிப்பவர்கள் வில்லன்கள் - சர்ச் கட்டுரை

கேரள பாதிரியார் விவகாரம் : பாலியல் புகாரளிப்பவர்கள் வில்லன்கள் - சர்ச் கட்டுரை

கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த பேராயருக்கு ஆதரவாக "இந்தியா கரண்ட்ஸ்" எனும் தேவாலயங்கள் சார்பில் நடத்தப்படும் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரியை "வில்லன்கள்" என்று மறைமுகமாக கட்டுரையில் சாடியுள்ளது.

ரோமன் கத்தோலிக் டயோசிஸ் ஆப் ஜலந்தரின் பிஷப், பிராங்கோ முலக்கல். இந்த டயோசிஸுக்கு கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடில் கான்வென்ட் ஒன்று உள்ளது. இதைக் கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்தார். பிஷப் பிராங்கோ  அந்த கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுபற்றி கோட்டயம் மாவட்ட போலீஸில் அண்மையில் புகார் அளித்தார் அந்த கன்னியாஸ்திரி. 

அவரது புகாரில், ‘முதன் முதலாக 2014-ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் பிஷப் பிராங்கோ. தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எடுக்கவில்லை. இதனால் போலீசில் புகார் கொடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பிஷப் முல்லாக்கலும் கன்னியாஸ்திரி மீது புகார் கொடுத்தார். ’இங்கிருந்து அவரை டிரான்ஸ்பர் செய்தோம். கன்னியாஸ்திரியும் அவர் உறவினர்களும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்றார்கள். பின்னர் மிரட்டினார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக அடிப்படை ஆதாரம் இல்லாத இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர்’ என்று பிஷப் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்க "இந்தியா கரண்ட்ஸ்" பத்திரிக்கையில் அபத்தமான விதங்களில் கட்டுரை வெளியாகி உள்ளது.

மேலும், அந்தக் கட்டுரையில் " அந்தக் கன்னியாஸ்திரி மதிப்புக்குரிய பிஷப் அவரை 13 முறை 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்துள்ளார். ஆனால், 13 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு ராசியில்லாத நம்பர். அண்மையில் நாங்கள் அந்தமானுக்கு சென்று இருந்தோம். அப்போது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். அந்த ரிசார்ட்டில் அறைகளின் எண் 11, 12, 12 ஏ என இருந்ததை தவிர, 13 என் எண் இடம் பெறவில்லை. எனவே 13 முறை பிஷப் பாலியல் வன்கொடுமை செய்திருக்க மாட்டார். அது பொய். இதுபோன்ற வன்கொடுமை நிகழ்வுகளில் ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்துவது தவறு. எனினும் காவல்துறை விரைவில் உண்மையை கண்டுபிடிக்கும்" என எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா உள்ளது என சமீபத்தில் வெளிவந்த ஆய்வு குறித்து, பாதுகாப்பின்மைக்கான காரணங்கள் குறித்தும் பேசிவிட்டு, புகாரளித்தவரை பெண் ஒருவரை வில்லன் என குறிப்பிட்டுள்ளது எத்தைகைய முரண் !