இந்தியா

'ஜனநாயக நாட்டில் கொடூர நகைச்சுவை'- காங்கிரஸ் கடும் தாக்கு

jagadeesh

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டிருப்பது ஜனநாயக நாட்டில் கொடூரமான நகைச்சுவை என காங்கிரஸ் சாடியுள்ளது.

இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இது அரசமைப்பு சட்ட நடைமுறைகளை சீர்குலைக்கும் என்று கூறியுள்ளார். ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் பாஜகவுக்கு 48 மணி நேர அவகாசமும் சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு தலா 24 மணி நேர அவகாசமும் வழங்கிய ஆளுநர், காங்கிரசை அழைக்கவே இல்லை என்றும் சுர்ஜேவாலா அதிருப்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஆட்சி அமலாக்கம் அவசரகதியிலான முடிவு என்றும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் மார்க்சிஸ்ட் விமர்சித்துள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதற்கு சிவசேனாவே காரணம் என பாரதிய ஜனதா குற்றஞ்சாட்டியுள்ளது. மக்களின் தீர்ப்பை மதிக்காமல் சிவசேனா பிடிவாதமாக இருந்தது என்று பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கண்டிவார் தெரிவித்துள்ளார்.