இந்தியா

“5 குர் ஆன் பிரதிகளை விநியோகிக்க வேண்டும்” - பிரிவினைவாத கருத்தை பதிவிட்ட மாணவிக்கு நீதிமன்றம் உத்தரவு

“5 குர் ஆன் பிரதிகளை விநியோகிக்க வேண்டும்” - பிரிவினைவாத கருத்தை பதிவிட்ட மாணவிக்கு நீதிமன்றம் உத்தரவு

webteam

மத பிரிவினைவாத கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாணவிக்கு 5 குர் ஆன்களை விநியோகம் செய்ய ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்து வருபவர் ரிசா பார்தி. இவர் சமூக வலைத்தளத்தில் மதவாத பிரிவினையை தூண்டும் கருத்தை தெரிவித்ததற்காக கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சில போராட்டங்கள் நடத்தின. அதேசமயம் கருத்து கண்டனம் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சில போராட்டம் நடத்தின. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்பி அஷுதாஸ் சேகர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவிக்கு ராஞ்சி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அத்துடன் 5 குர் ஆன் பிரதிகளை 15 நாட்களுக்குள் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதில் ஒரு குர் ஆனை அஞ்சுமான் இஸ்லாமிய குழுவிடம் வழங்க வேண்டும் என்றும், மற்ற நான்கை பள்ளி நூலகங்கள் மற்றும் கல்லூரி நூலங்களில் வைக்கலாம் என்றும் கூறியுள்ளது. மாணவியை விடுதலை செய்வதற்கு முன்பு இரு தரப்பினரிடமும் நீதிமன்றம் ஒப்புதல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.