இந்தியா

''எம்.பி. ஆனாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயி'' - கேரள பெண் எம்பி ரம்யா  !

''எம்.பி. ஆனாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயி'' - கேரள பெண் எம்பி ரம்யா  !

webteam

கேரளாவில் இருந்து 17ஆவது மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்பி என்ற சிறப்பை பெற்றவர் ரம்யா. எம்.பி.,யானாலும், தான் ஒரு விவசாயி தான் என்று நிலத்தில் இறங்கி நாற்று நட்டு வருகிறார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக 36 ஆண்டுகள் செயல்பட்டு வந்த ஆலத்தூர் தொகுதி. முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் வசமாக்கிய பெருமை ரம்யா ஹரிதாசையே சேரும். 

32 வயதான ரம்யா ஹரிதாஸ் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் எம்.பி.யுமாவார். கோழிக்கோட்டைச் சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் ராதா என்பவரின் மகள் ரம்யா ஹரிதாஸ். தாயுடன் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். 

ராகுல் காந்தி நடத்திய திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் சிறப்பு அந்தஸ்தை பெற்றார். இளையோர் காங்கிரஸ்‌ பிரிவில் இணைந்த ரம்யா தனது அரசியல் பயணத்தில் தீவிரம் காட்டினார். நில அபகரிப்பு போராட்டத்தில் தம்மை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டார். பாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்த ரம்யா போரட்டக்களத்தில் அதை பயன்படுத்தாமல் இருந்ததில்லை.

குழந்தைப்பருவக் கல்வி மற்றும் ஆடை அலங்கார பட்டயப்படிப்பை முடித்திருந்தாலும் விவசாயத்தை இன்றளவும் ரம்யா கைவிட்டதில்லை. கேரளாவில் மழை பெய்துவருவதால் பரவலாக நடந்து வரும் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரம்யா.

டிராக்டர் கொண்டு தன் நிலத்தைத் தானே உழுது, சக தொழிலாளர்களுடன் சேர்ந்து நாற்று நட்டு நடவுப் பணிகளையும் மேற்கொண்டார். எம்பியானாலும் அடிப்படையில் தாம் ஒரு விவசாயி என்பதை மறக்க முடியாது என ரம்யா ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்