தெலுங்கு சினிமாவில் தனக்கெனதனி இடத்தைக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல பரிணாமங்களைக் கொண்ட ராம் கோபால் வர்மா தெலுங்கில் மட்டுமல்லாது ஹிந்தி, கன்னடா போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தெலுங்குத் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைக் கொண்டுள்ள இவர் தற்போது ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவைப் பற்றி அவதூறு கருத்துக்களைப் பதிவிட்ட விவகாரத்தில் காவல் துறை வழக்கில் சிக்கியுள்ளார். அப்படி காவல்துறை வழக்குப் பதிவு செய்யும் அளவிற்கு என்ன நடந்தது ? முதல்வரை இப்படி விமர்சிக்கும் அளவிற்கு அவர்களுக்குள் என்ன பகை என்பதைப் பார்க்கலாம்.
சர்ச்சைப் பேச்சிற்கு மிகவும் பெயர் போனவ இயக்குநர் ராம் கோபால் வர்மா நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு சிவா என்னும் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். அதன்பின் தெலுங்கில் இருந்து பாலிவுட்டில் கால் பதித்த இவர் சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார். பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.அதே போல சூர்யா நடித்த ரத்த சரித்திரம் 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார். அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் என்னும் படத்தையும் இயக்கி உள்ளார். கடந்த 2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் அடல்ட் படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர், தொடர்ந்து அதே போன்ற படங்களையே இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் என பல படங்களை இயக்கி இதற்கெனவே ஆர்ஜிவி வேர்ல்ட் என்னும் புதிய பதத்தையே உருவாக்கியுள்ளார்.
இயக்குநர் ராம் கோபால் வர்மா தொடக்கத்தில் இருந்தே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார். அத்தோடு மட்டுமின்றி தொடர்ச்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யான் ஆகியோருக்கு எதிராகப் பலக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பொதுவெளிகளில் பேசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். பேசுவதோடு நில்லாமல் இன்னும் ஒரு படி மேலே சென்று 2019 இல் 'லக்ஷ்மி'ஸ் என்டிஆர்' என்ற படத்தையும் தயாரித்திருந்தார். 1995 இல் என்டிஆருக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தி முதலமைச்சராக ஆன என்டிஆரின் மருமகன் சந்திரபாபு நாயுடுவின் சர்ச்சைக்குரிய பாத்திரத்தை இந்தப் படம் சித்தரித்தது பெரும் பேசுபொருளை உருவாக்கியிருந்தது.
அடுத்தகட்டமாக இன்னும் முன்னோக்கி சென்று 'வியூஹம்' என்னும் படத்தைத் தயாரித்தார். அதில் சந்திரபாபு நாயுடுவின் கதாப்பத்திரமாக கூறப்பட்ட கதாப்பாத்திரம் மிகவும் எதிர்மறைக் கதாப்பத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும் அப்படத்தின் டிரைலரை சமூகவலைதளத்தில் பதிவிட்டு சந்திரபாபு நாயுடு , சந்திரபாபு நாயுடுவின் மகன் மற்றும் பவல் கல்யான் ஆகியோரை டேக் செய்து தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் NTR ஆனால் அதை அழிப்பவர் CBN என்று வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அவர் எப்போதும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடுவதோடு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பவன் கல்யாணை கேலி செய்யும் விதமாகவும் பேசி வருகிறார். அவ்வப்போது பவன் கல்யாணின் ரசிகர்களுக்கும் ராம் கோபால் வர்மாவிற்கும் இடையே ஒரு ஆன்லைன் போரே நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறை வளாகத்தின் முன்பு நின்று செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இப்படி தொடர்ச்சியாக சந்திரபாபு நாயுடுவோடு பனிப்போரில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த தேர்தலுக்கு முன் ததாகா படத்தின் புரோமோஷன் நிகழ்வின்போது சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இப்பதிவு குறித்து ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்த்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மண்டல் பரிஷத் செயலாளர் ராமலிங்கம் , மட்டிப்பாடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் ராம் கோபால் வர்மா மீது ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர முதல்வருக்கும் பிரபல இயக்குநருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது காவல்துறை வரையில் சென்றுள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.