ராம் கோபால் வர்மா - ஆந்திர துணை முதல்வர் மற்றும் முதல்வர் புதிய தலைமுறை
இந்தியா

ஆந்திர முதல்வர், துணை முதல்வர் குறித்து சர்ச்சைப் பதிவு... இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு!

தெலுங்கு தேச கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

PT WEB

தெலுங்கு தேசம் கட்சியையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் ப்ராமினி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரையும் விமர்சிக்கும் வகையில், இயக்குநர் ராம்கோபால் வர்மா சமூகவலைதளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவிட்டிருந்தார். இதை எதிர்த்து தற்போது (கடந்த ஞாயிறன்று) அவர்மீது தெலுங்கு தேச கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் தற்போது ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் கொடுத்த புகார் அடிப்படையில், பரகசம் மாவட்டத்தில் உள்ள மடிப்பாடு காவல்நிலையத்தில் (Maddipadu Police Station) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வக்கு தொடரப்பட்டிருப்பதாக சப் இன்ஸ்பெக்டர் சிவ ராமையா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து விசாரணை தொடங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ram Gopal Varma

வழக்கு விவரம்:

முன்னதாக தன்னுடைய ‘வியூகம்’ படத்துக்கான ப்ரமோஷனின் ஒருபகுதியாக, மேற்குறிப்பிடப்பட்ட சர்ச்சைக்குரிய விமர்சனத்தை தன் சமூக வலைதளத்தில் வைத்திருந்தார் ராம்கோபால் வர்மா. அதன்பேரில் அவர்மீது நேற்று முன்தினம் (நவ. 10) அன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று (நவ. 11) வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த ‘வியூகம்’ படமானது, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் உருவாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தொடக்க காலத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கு முன் வந்தது அப்படம். அதாவது ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் வந்தது. இதேபோல ‘Lakshmi's NTR’ என்ற ராம் கோபால் வர்மாவின் கடந்த கால திரைப்படம், தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சிக்கல்களை மையப்படுத்தி வந்திருந்தது.

வியூகம் திரைப்படம் ஜெகனின் வளர்ச்சியை மையப்படுத்தி இருந்த நிலையில், Lakshmi's NTR படம் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப பிரச்னைகளையும் மையப்படுத்தி இருந்தது கடும் எதிர்வினைகளைப் பெற்றது.

இதனால் ராம் கோபால் வர்மா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளராகவே அறியப்பட்டார். இதற்கு வலுசேர்க்கும் வகையில், அவரும் தற்போது துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இப்படியான நிலையில்தான் தற்போது (சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில்) ராம் கோபால் வர்மா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.