இந்தியா

ரக்ஷா பந்தன் பரிசு : தம்பிக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய சகோதரி

webteam

உத்தரபிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் பரிசாக தனது தம்பிக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கி சகோதரி ஒருவர் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

உத்தரபிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் சாராபாய். இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. பல்வேறு மருத்துவமனைகளை அணுகிய போதும் மாற்று சிறுநீரகம் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகியது. இந்நிலையில், விவேக்கின் சகோதரி தனது ஒரு சிறுநீரகத்தை வழங்கி அவரின் உயிரை காப்பாற்றி உள்ளார். 

இது குறித்து விவேக்கின் சகோதரி வந்தனா கூறுகையில், "நான் என் சகோதரனை மிகவும் நேசிக்கிறேன். அவர் என்னுடைய கடின நாட்களில் உறுதுணையாக இருந்தார். அவர் எனக்காக செய்த உதவிகளுக்கு மாறாக அவர் உயிரை காப்பாற்றுவது என் கடமை. மேலும் இந்த ஆண்டு ரக்‌ஷாபந்தன் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனது சகோதரன் மறு வாழ்வு பெற்றுள்ளான். அதனால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக ரக்‌ஷாபந்தனை கொண்டாடினோம்" என கூறினார்.

"மனித உயிரை காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது. எனவே அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும். அதனால் பல உயிர்களை காப்பற்றலாம்" எனவும் நந்தனா கூறியுள்ளார். ரக்‌ஷாபந்தன் அன்று சகோதரர்கள் தனது சகோதரிகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வார்கள். வழக்கத்திற்கு மாறாக இங்கு சகோதரி தனது சிறுநீரகத்தை தம்பிக்கு ரக்‌ஷாபந்தன் பரிசாக வழங்கியுள்ளார்.