தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து புதிய மாநிலங்கள் அவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் தமிழகத்திலிருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவை சேர்ந்த ரத்தினவேல், மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
திமுக உறுப்பினர் கனிமொழியின் பதவிக்காலமும் அதே தேதியில் முடிவடைய இருந்த நிலையில், அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாததால் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே அடுத்த மாதம் 24-ம் தேதிக்குள் 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக தேர்தல் நடத்த உயர்மட்ட ஆலோசனைகள் நடந்த இருப்பதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைவிலேயே தேர்தல் தேதி குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்ந்தெடுக்க உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களில் மதிமுகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஏற்கனவே சொல்லப் பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடம் மதிமுகவின் தலைவரான வைகோவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதிமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாமகவைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.