உத்தரப்பிரதேசத்தில் 10 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பாக 1 கூடுதல் வேட்பாளர் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். பாஜகவின் எட்டாவது வேட்பாளரான சஞ்சய் சேட் பிற கட்சிகளின் வாக்குகளை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு வேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடம் போதிய வாக்குகள் இல்லாத நிலையில், வேட்பாளர் குபேந்திர ரெட்டிக்கு ஆதரவாக பாஜக வாக்களிக்க உள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளையும் தன் பக்கம் இழுக்க குபேந்திர ரெட்டி முயற்சி செய்து வருவதாக கர்நாடகா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மூன்று மாநிலங்களில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.