இந்தியா

கும்பல் கொலையை தடுக்க குழு அமைப்பு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Rasus

கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், அதுதொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இரு உயர்நிலைக் குழுவை அமைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் வெளியிட்டுள்ளார். பசு பாதுகாப்பு என்ற பெயரிலும், குழந்தைகள் கடத்தல் வதந்தியாலும் நாட்டில் கும்பல் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி அறிவுறுத்தியிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த இரு குழுக்களை அமைத்துள்ளது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கெளபா தலைமையில் மற்றொரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.