model image எக்ஸ் தளம்
இந்தியா

ராஜஸ்தான் | காவல்துறை தேர்வில் டாப் ரேங்க் எடுத்தவர்கள் மறுதேர்வில் ஃபெயில்.. பாயும் கைது நடவடிக்கை!

ராஜஸ்தான் காவல்துறை தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று, பயிற்சியில் இருப்பவர்களிடமும் முறைகேடு அரங்கேறி உள்ளது.

Prakash J

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து இதுகுறித்த மர்ம முடிச்சுகள் நாள்தோறும் அவிழ்ந்தவண்ணம் இருந்தது. சிபிஐயும் தீவிரமாக விசாரித்துவருவதுடன், மோசடியில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்து வருகிறது. இந்த நிலையில், +2 பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி ஒருவர், நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்றிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அந்த மாணவி மீண்டும் நடத்தப்பட்ட துணைத் தேர்விலும் ஃபெயிலாகி இருந்தார். இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளானது. இதுபோன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பவர்களிடமும் அரங்கேறி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு பொதுப் பணி ஆணையம், காவல் துறையினருக்கான வேலைவாய்ப்பு கொடுத்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்பேரில் தேர்வு நடத்தப்பட்டு, ஆட்களும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. அதன்பேரில், மறு தேர்வு நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சிறப்பிடம் பிடித்து எஸ்ஐ பயிற்சி எடுத்து வந்த பலர், தற்போது மீண்டும் நடத்தப்பட்ட தேர்வில் அவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தது தெரிய வந்ததையடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: திடீரென உயிரிழந்த ‘ரஷ்ய உளவாளி’ ஹவால்டிமிர் திமிங்கலம்.. விசாரணை நடத்த முடிவு.. பிரபலமானது எப்படி?

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள், ”இந்தியில் 188.68 மதிப்பெண்களையும், பொது அறிவுப் பாடத்தில் 200க்கு 154 மதிப்பெண்களையும் பெற்றிருந்த ஷோபா ரைகா என்பவர், தற்போது முறையே 24 மற்றும் 34 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவர், அப்போது 5வது ரேங்க் எடுத்திருந்தார். அதுபோல் 11வது ரேங்க் எடுத்திருந்த மஞ்சு தேவி என்பவர் அப்போது இந்தி மற்றும் பொதுப் பாடத்தில் முறையே 183.75, 167.89 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், இப்போது இந்தியில் 52 மதிப்பெண்களையும், பொது அறிவுப் பாடத்தில் 71 மதிப்பெண்களையும் மட்டுமே பெற்றுள்ளார். இவர்களைப்போலவே அந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் முதலிடம் பிடித்த பல மாணவர்கள், மறுதேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் அனைவரும், ராஜஸ்தான் காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் துறை ஆய்வாளருக்கான பயிற்சியில் இருப்பவர்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவருக்கும் புதிதாகக்கூட வினாத்தாள் வழங்கப்படவில்லை. அந்த ஆண்டு நடைபெற்ற அதே வினாத்தாள்கள்தான் வழங்கப்பட்டுள்ளன. அதிலும், பொது அறிவு கேள்விகளில் சில எளிய வினாக்களுக்குக்கூட அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், வழக்கில் கைதாகி இருக்கும் நபர்களோ, பயிற்சி காவலர்களைவிடக் கூடுதலாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதன்பேரிலேயே இந்த கைது நடவடிக்கை தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டு காவல் துறை ஆய்வாளர் பணியிடத்துக்கான தேர்வு வினாத்தாளை கசியவிட்ட வழக்கில் ராஜஸ்தான் பொதுப் பணி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ராமு ராம் ரைகா, சிறப்பு அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முதலிடம் பிடித்தவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. தற்போது அதில் அவர்கள் தோல்வியடைந்த நிலையில்தான் இந்த கைது நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. மேலும், ராஜஸ்தான் பொதுப் பணி ஆணையத்தின் பல முக்கியப் பொறுப்புகளில் ராமு ராம் ரைகா இருந்துள்ளதால், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதையும் படிக்க: ஜார்க்கண்ட்: போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. மயங்கி விழுந்த 11 பேர் உயிரிழப்பு.. என்ன காரணம்?