கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜக, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பஜன்லால் ஷர்மா உள்ளார். இந்த நிலையில், குடியரசுத் தினத்தின்போது மேடையில் சரஸ்வதி படத்தை வைக்காத ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, ராஜஸ்தான் மாநில கல்வித் துறை அமைச்சர் மதன் திலாவர், கடந்த 22ஆம் தேதி பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷன்கஞ்ச் பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில், உரையாற்றிய அவர், “சிலர், தங்களுடைய தகுதிக்கு மீறிச் செயல்பட்டு வருகிறார்கள். இன்னும்கூட, அவர்கள் வேலை செய்யும் பாணியை மாற்றிக் கொள்வதில்லை. ’பள்ளிக்கு சரஸ்வதி தேவி என்ன பங்களிப்பு செய்தார்’ எனக் கேட்கிறார்கள். இந்த பகுதியில் யார் அப்படி கேள்வி எழுப்பினாலும் நான் உடனடியாக அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
சரஸ்வதி தேவியை அவமரியாதை செய்ததற்காகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருந்தார், அமைச்சர் மதன் திலாவர். அதன்பேரில், மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளும் அந்த ஆசிரியைரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த விஷயம், ராஜஸ்தான் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
அதாவது, ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டம் கிஷன்கஞ்ச்க்கு அருகே உள்ள லக்டாய் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஆசிரியையாகப் பணிபுரிந்தவர் ஹேம்லதா பைர்வா. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தப் பள்ளியிலும் குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அன்றைய நாளில் மேடையில் காந்திஜி, அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதேநேரத்தில் சரஸ்வதி தேவி படம் வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சரஸ்வதி தேவியின் படத்தை மேடையில்வைக்க உள்ளூர் கிராம மக்கள் வலியுறுத்திய நிலையிலும் அந்த ஆசிரியை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தவிர, ‘பள்ளி மற்றும் கல்விக்காக சரஸ்வதி தேவி எந்தப் பங்களிப்பயும் செய்யவில்லை’ எனச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டக் கல்வி நிர்வாகத்திற்குப் புகார் போயிருக்கிறது. அவர்களும், விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், கடந்த வாரம் அந்த ஏரியாவுக்குச் சென்ற அமைச்சரின் காதிலும் இதுகுறித்து தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதாவது, கடந்த ஜனவரி 26ஆம் தேதி, இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில், அதற்குக் கடந்த வாரம் அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. அதிலும் அவர், பிப். 22ஆம் தேதி பேசி முடித்து உத்தரவு போட, மறுநாள் (பிப்.23) நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ‘சரஸ்வதி தேவியை அவமரியாதை செய்ததற்காகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும்’ அவரை இடைநீக்கம் செய்திருப்பதாக மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹேம்லதா பைர்வா மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவு நலச் சங்கம் எழுதியுள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டதாகக் கூறி, கோட்டா மாவட்டத்தின் சங்கோட் பகுதியில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி கஜூரியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.