ராஜஸ்தான் - மழை அளவு எக்ஸ் தளம்
இந்தியா

அதிக மழைப்பொழிவை சந்தித்த ராஜஸ்தான் தார் பாலைவனம்... கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிட்டு வெளியான தரவுகள்!

இந்தியாவின் வறண்ட பகுதிகளில் ஒன்றான ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

மேற்கு ராஜஸ்தானின், தார் பாலைவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இயல்பைவிட அதிகமாக மழை இவ்வருடம் பொழிந்துள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பகுபாய்வுகளின் படி, மேற்கு ராஜஸ்தானில் 2005 - 2024 வரையிலான இருபது ஆண்டுகளில், கடந்த 12 ஆண்டுகளாகவே இயல்பைவிட அதிகமான மழைப்பதிவாகியுள்ளதாக தெரிவிக்கிறது. அதன்படி இந்த காலக்கட்டத்தில் சராசரி பருவமழை இயல்பை விட 19% அதிகமாக உள்ளது.

அதேநேரம், அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், போன்றவை இதற்கு நேர்மாறாக வெவ்வேறு மழைப்பொழிவு அளவுகளை பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, பஞ்சாப்பில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு வருடம் மட்டுமே இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. அதாவது அங்கு 12 ஆண்டுகள் சாதாரண மழைப்பொழிவும், ஏழு ஆண்டுகள் குறைவான (13.5 %) மழைப்பொழிவும், ஒரு ஆண்டு அதிக மழைப்பொழிவும் இருந்துள்ளது. இதுவே ஹரியானாவில் (கடந்த 20 ஆண்டுகளில்) 3 ஆண்டுகள் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவும், 8 ஆண்டுகள் சாதாரண மழைப்பொழிவும், 7 ஆண்டுகள் பற்றாக்குறையான மழைப்பொழிவும் (13.3%) பதிவாகியுள்ளது. இதுவே ராஜஸ்தானில் (கடந்த 20 ஆண்டுகளில்) 12 ஆண்டுகள் அதிக கனமழையும், 5 ஆண்டுகள் சராசரி மழையும், 3 ஆண்டுகள் குறைவான மழையும் பொழிந்துள்ளது.

இந்தியாவின் வறண்ட பகுதியாக மேற்கு ராஜஸ்தானின் மழைப்பொழிவானது இயல்பாக 283.6 mm என்றும் பஞ்சாப், ஹரியானா மழைப்பொழிவு 439.8, 430.7 mm என்றும்தான் இருக்கும். அதாவது பஞ்சாப், ஹரியானாவில் பெய்யும் மழையில் 2ல் 1 பங்குதான் ராஜஸ்தானில் பெய்யும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ராஜஸ்தானின் மழைப்பொழிவு அளவு பஞ்சாப், ஹரியானாவை விட அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றது.

தார் பாலைவனத்தில் மழை

ஏன் இப்படி என்பது குறித்து மூத்த வானிலை ஆய்வாளரும், மத்திய அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளருமான எம்.ராஜீவன் தெரிவிக்கையில், “ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப், ஹரியானாவின் மழைப்பொழிவு என்பது பருவமழையின் நிலை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலைகள் (low-pressure systems) மேற்கு நோக்கி நகர்வதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, சமீபத்திய ஆண்டுகளில், பருவமழையானது அதன் இயல்பான நிலைக்கு தெற்கே, அதன் low-pressure systems உடன் சேர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால்தான் ராஜஸ்தானில் அதிக மழைப்பொழிவும், பஞ்சாப் - ஹரியானவில் குறைவான மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.