இந்தியா

இந்தியாவிலேயே இங்கேதான் வெயில் அதிகம் ! அனல் பறக்கும் ராஜஸ்தான்

webteam

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு பகுதியில் 50 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. 

இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டீகர் மற்றும் விதர்பா ஆகிய வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு பகுதியில் 50 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. 

இதனால் ஆங்காங்கே கடுமையான வெப்பக்காற்று வீசி வருகிறது. கடுமையான வெப்பத்தின் காரணமாக ராஜஸ்தான் மாநில மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவுக்கு நிலைமை உள்ளது. அதேவேளையில் தண்ணீர் பஞ்சமும் ஆங்காங்கே நிலவுவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்

அதிகாலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்படுவதால் காலை 10 மணிக்கு மேலே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இதனால் சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துள்ள சுரு நகர மக்கள் காய்கறிகள், பழங்கள், மோர் உள்ளிட்ட உணவு வகைகளையே உட்கொண்டு வருகின்றனர்.

வெயில் காரணமாக உடல்நிலை பிரச்னைகளாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் அங்கு மருத்துவர்கள் அனைவரும் விடுப்பின்றி பணியாற்ற வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடும் வெயிலால் மக்கள் மட்டுமின்றி, பறவைகளும், விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்களில் இருந்து பறவைகள் சுருண்டு விழுந்து உயிரிழப்பதாக கூறப்படுகிறது. கடுமையான வெயில் நிலவுவதாகவும், அடுப்புக்குள் இருப்பது போன்று உணர்வதாகவும் சுரு நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.