இந்தியா

மெஜிஷியனை காய்கறி வியாபாரியாக மாற்றிய ஊரடங்கு

மெஜிஷியனை காய்கறி வியாபாரியாக மாற்றிய ஊரடங்கு

webteam

மாயாஜாலம் எனப்படும் தந்திரங்களை கொண்டு மேடை நிகழ்ச்சிகள் நடத்தும் நபர் ஊரடங்கால் காய்கறி வியாபாரியாக மாறிய சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தினக்கூலிகளின் வாழ்க்கையை வறுமையில் தள்ளியுள்ளது. அத்துடன் பல்வேறு தொழில் புரியும் நபர்களையும் வருமானமில்லாத நபர்களாக மாற்றியுள்ளது. வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை விற்போர் மட்டுமே இந்த ஊரடங்கில் வருமானம் ஈட்டுகின்றனர். இதனால் பலரும் பணத்திற்காகக் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தோஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ மஹோ (33) என்ற மெஜிஷியன் வருமானமற்ற நிலைக்குச் சென்றுள்ளார். மேடைகளில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி இவர் வருமானம் ஈட்டி வந்தார். ஆனால் கொரோனா வைரஸால் கூட்டம் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இவரது வருமானம் நின்றுவிட்டது.

நாள் ஒன்று 8 முதல் 10 மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இவர் 15 வருடம் அனுபவம் கொண்டவர். தற்போது வாடகை கொடுக்கவும், வாழ்வாதாரத்திற்கும் பணம் இல்லாததால் சாலையில் காய்கறி விற்கும் தொழிலுக்கு வந்துள்ளார். தனது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நெருக்கடி நிலையில் சிக்கியதே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.