ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 21 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 4,371 ஒன்றிய கவுன்சில் இடங்களில் 1,989 இடங்களை வென்றதன் மூலம் பாஜக முதன்மையான கட்சியாக மாறியுள்ளது. 1,852 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 439 சுயேச்சைகள், 60 ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி வேட்பாளர்கள், 5 பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் மற்றும் 26 சிபிஐஎம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
இதேபோல், மாவட்ட கவுன்சில் தேர்தல்களிலும் பாஜக காங்கிரஸைவிட பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 636 இடங்களில், பாஜக 353 இடங்களை வென்றுள்ளது. 252 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, சிபிஎம் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 18 இடங்களிலும் வென்றுள்ளனர்.
மொத்தமுள்ள 636 மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களையும், 4,371 ஒன்றியக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு 21 மாவட்டங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 1,778 வேட்பாளர்களும், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 12,663 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். வாக்குப்பதிவு நவம்பர் 23 மற்றும் 27, மற்றும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.