சுக்தேவ் சிங் கோகமேடி ட்விட்டர்
இந்தியா

சுட்டுக் கொல்லப்பட்ட கர்னி சேனா தலைவர்! வெடித்த போராட்டம்; பரபரப்பில் ராஜஸ்தான்..ஆலோசனையில் ஆளுநர்!

ராஜஸ்தானில் சுக்தேவ் சிங் கோகமேடி கொலை செய்யப்பட்டதை அடுத்து சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து அம்மாநில ஆளுநர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Prakash J

ராஜஸ்தானில் தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து நேற்று (டிச.5) சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று மதியம் ஷியாம்நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், இதில் காயம்பட்ட கோகமேடி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த கொலைக்கு, ரோஹித் கோதாரா என்ற கும்பல் பொறுப்பேற்றுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக, கோகமேடி ஆதரவாளர்கள், இன்று மாநிலம் முழுதும் பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, ராஜஸ்தான் காவல்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உஷாராக இருக்குமாறு ராஜஸ்தான் காவல்துறைக்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

அதேநேரத்தில், சுக்தேவ் சிங் கோகமேடி கொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. கர்னி சேனா தொண்டர்கள் சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு தீயிட்டும் முழு அடைப்பு போராட்டத்தை மீறிச் செயல்பட்ட கடைகளை அடித்து நொறுக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூர் மட்டுமின்றி, சுரு, உதய்பூர், அல்வார் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ள சூழலில் நிலைமை கையைவிட்டுச் செல்லாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து அம்மாநில ஆளுநர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை, அவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் சன்மானத்தை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சர்ச்சை பேச்சு; மக்களவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி செந்தில்குமார்- ஒரே நாளில் நடந்த திருப்பம்!