ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் பஜன் லால் சர்மா முதல்வராக உள்ளார். இந்த நிலையில், அம்மாநிலத்தில் பாஜக முன்னாள் தலைவர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் ஒருவர் 7 விநாடிகளில் 5 முறை குனிந்து வணக்கம் வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநில பார்மேர் மாவட்டத்தின் ஆட்சியராக இருப்பவர், டினா தாபி. இவர், பார்மேர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகளுக்கு பெயர் பெற்றவர். அவருடைய முயற்சியால் நகரின் பல இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 'புதிய பார்மேர்' எனும் முழுக்கம் மூலம் மக்களுக்கும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
இதையும் படிக்க: 2025 IPL: CSK-வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தோனி..? உற்சாகமாகும் ரசிகர்கள்!
இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு திடீரென பாஜக முன்னாள் தலைவரான சதீஷ் பூணியா சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக பார்மே மாவட்ட ஆட்சித் தலைவரான டினா தாபி, 7 விநாடிகளில் 5 முறை குனிந்து வணக்கம் வைக்கிறார். ஆனால், கையில் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்துவரும் அவர், டினா தாபி வணக்கம் செலுத்துவதைக் கவனிக்கவில்லை. எனவேதான் அவர் மீண்டும் மீண்டும் வணக்கம் வைக்கிறார். இப்படியாக 4 முறை வணக்கம் வைத்த பின்னர், 5வது முறையாக வைக்கப்பட்ட வணக்கத்தையே சதீஷ் கவனிக்கிறார்.
பின்னர் நன்றி கூறி டினா தாபி குறித்து பேசிய சதீஷ், "கலெக்டர் நன்றாக வேலை செய்கிறார். நகரின் தூய்மைக்காகச் சிறப்பாக பாடுபடுகிறார். அனைத்து இடங்களிலும் குப்பைத்தொட்டிகளை நிறுவுகிறார். நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள். பார்மேரை இந்தூர்போல துய்மையாக மாற்றிவிடுவீர்கள்போல.." என புகழ்ந்து பேசுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்றாலும், இளம் அதிகாரியின் செயல், அரசியல்வாதிக்கும் அதிகாரத்துவத்துக்கும் இடையே உள்ள இழிவான தொடர்பைப் பிரதிபலிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.