ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் பஜன் லால் சர்மா முதல்வராக உள்ளார். இந்த நிலையில், தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை ’ஆதரவற்ற மாடுகள்’ என அம்மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் பசு குறித்த செய்திகள் அடிக்கடி வருவதை பார்க்கலாம். அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் சொல்லவே வேண்டாம். பசு சாணத்தைச் சாப்பிடுவது பற்றியும், பசு கோமியத்தைக் குடிப்பது பற்றியும் அவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
அதிலும், பசுவின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்து வரும் செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், ராஜஸ்தானில் அமைந்திருக்கும் பாஜக அரசு, புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை, இனிமேல் 'ஆதரவற்ற மாடுகள்' [Destitue/Helpless Cows] என்று அழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தெரு மாடுகளை அப்படி அழைப்பது, அந்த மாடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளதாலேயே மாநில அரசு இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் சட்டமன்றக் கூட்டத்தின்போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோராராம் குமாவத் இந்த மாற்றத்தை முன்மொழிந்த நிலையில், தற்போது அரசு அதை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. எனவே அதன்படி தெருவில் சுற்றித் திரியும் பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்பதற்கு பதிலாக ஆதரவற்ற மாடுகள் என்றே ராஜஸ்தான் மக்கள் அழைக்க வேண்டும்.
இதுகுறித்து அமைச்சர் குமாவத், ”பசுக்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பசு நலனுக்காக, 250 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், முதல்வர் கால்நடை மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
”ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு, பசுக்களின் நலனுக்காக கணிசமான எதையும் செய்யாமல், அவைகளின் நிலையைப் பற்றி உதட்டளவில் பேசுகிறது” என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்பு குற்றஞ்சாட்டியிருந்தது.