anju pt web
இந்தியா

முகநூல் நட்புக்காக பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண்! விடாமல் தொடரும் சர்ச்சை!

முகநூலில் ஏற்பட்ட நட்பின் காரணமாக ராஜஸ்தான் பெண்ணொருவர் பாகிஸ்தான் சென்றுள்ளார். இதில் அவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பெண் என்பதால், ஏராளமான சர்ச்சைகள் அவரை தொடர்கிறது.

Angeshwar G

உத்தரப் பிரதேசத்திலுள்ள கைலோர் கிராமத்தில் பிறந்து ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் அஞ்சு. 34 வயதான இவருக்கு சில வருடங்களுக்கு முன் முகநூலில் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 29 வயதான நஸ்ருல்லா பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துன்க்வா பகுதியில் வசித்து வருகிறார். மருத்துவத்துறையில் பணி புரிந்த இவருக்கும் அஞ்சுவுக்கும் ஏற்பட்ட நட்பின் காரணமாக அஞ்சு தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து சர்ச்சைகளும் இருவரையும் சூழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் சென்ற அஞ்சு முதலில் காவல்துறையின் கவுன்சிலில் இருந்துள்ளார். அவரது பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அஞ்சு விடுவிக்கப்பட்டது குறித்து அங்குள்ள அதிகாரிகள் ஊடகங்களில் கூறும் போது, “பயணத்திற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றுள்ளனர்.

போலவே அங்குள்ள மூத்த அதிகாரி முஸ்தாக் காப் என்பவர் கூறுகையில், “அஞ்சு மற்றும் அவரது நண்பர் இருவரிடமும் போதிய ஆவணங்கள் இருப்பது சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னரே அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

இது குறித்த செய்திகள் பரவிய நிலையில் ராஜஸ்தான் காவல் துறையினர் அஞ்சு குடும்பத்தினர் குடியிருந்த பிவாடி பகுதிக்கு சென்று அவரைப் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அஞ்சுவின் கணவர் அர்விந்த் கூறுகையில், “அவர் வியாழன் அன்று தனது தோழியைப் பார்ப்பதற்கு ஜெய்ப்பூர் செல்வதாக கூறி சென்றார். சில தினங்களுக்கு பின் அவரிடம் இது குறித்து கேட்டபோதுதான், அவர் பாகிஸ்தான் சென்றது தெரிய வந்தது. இன்னும் 2-3 நாட்களுக்குள் திரும்பி விடுவதாக சொன்னார். நான் அவரிடம் பேசி, அவரை திரும்ப வரச் சொல்லி வருகிறென். அவர் திரும்பி வருவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றுள்ளார்.

இந்நிலையில் அஞ்சுவும் நஸ்ருல்லாவும் திருமணம் செய்ய முடிவுசெய்ததாக வதந்திகள் பரவின. இதை தடுக்கும் வகையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் நசருல்லா அளித்த பேட்டியில், “எங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “அஞ்சு ஒரு மாத கால விசாவில் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். அவர் அங்கு சில நாட்கள் தங்க விரும்புவதாக கூறியுள்ளார். நசருல்லாவை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் இங்கு வரவில்லை. தற்போது அவர் நஸ்ருல்லாவின் வீட்டில் வசித்து வருகிறார். நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாப்படி ஆகஸ்ட் 20 அவர் நிச்சயம் புறப்பட்டு விடுவார்” என்றுள்ளனர்.

அஞ்சு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே இங்கு வந்துள்ளேன். 2-3 நாட்களில் மீண்டும் இந்தியா திரும்பிவிடுவேன். இந்திய ஊடகங்களுக்கு எனது வேண்டுகோள், தயவு செய்து எனது குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்களிடம் கேள்விகளை கேட்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அஞ்சுவிற்கும் அர்விந்திற்கும் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு 15 வயதில் பெண் குழந்தையும் 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இது குறித்து பிவாடி காவல்துறையினர் கூறுகையில் “பிவாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் தம்பதியினர் பணிபுரிந்து வந்தனர். அஞ்சுவிடம் பாஸ்போர்ட் இருந்தது. தற்போது அவர் சென்றிருப்பது தொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் ஏதும் அளிக்கவில்லை” என்றுள்ளனர்.