ராஜஸ்தான்: போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தை மீட்பு எக்ஸ் தளம்
இந்தியா

ராஜஸ்தான்: போர்வெல்லில் 35 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை... 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு!

ஜெ.நிவேதா

ராஜஸ்தானின் ஜெய்பூரில், டௌசா என்ற பகுதியில் நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொருவர், மூடப்படாத போர்வெல் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அதில் அவர் தவறிவிழுந்துள்ளார்.

35 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து மாநில பேரிடர் மீட்புத்துறையினர் உதவியோடு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்புப்பணி நடந்துவந்தது. இந்நிலையில் தற்போது (18 மணி நேர போராட்டத்துக்குப் பின்) குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான்: போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தை மீட்பு

குழந்தை மீட்கப்பட்டது எப்படி?

ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம், குழந்தை விழுந்த இடம் அருகே குழி தோண்டப்பட்டு மீட்புப்பணியானது நடந்தது. இதுகுறித்து மீட்புப்பணியின்போது அங்கிருந்த ஒரு அதிகாரி ஊடகங்களில் தெரிவிக்கையில், “குழந்தை விழுந்த இடத்திற்கு இணையாக பக்கவாட்டில் தோண்டுகிறோம். அதன்வழியே குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளோம். குழந்தை தற்போதுவரை சுயநினைவோடு இருக்கிறார்; முழுமையாக அவரை கண்காணிக்கிறோம்” என்றிருந்தார்.

நேற்று மாலை 5 மணிக்கு குழந்தை விழுந்த நிலையில், மழை காரணமாக அது இடையே தாமதமானது. இருப்பினும் குழாய் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இதற்கு முன் இப்படி போர்வெல்லில் தவறி விழுந்த குழந்தைகளை பத்திரமாக மீட்ட கிஷன்கர் பகுதியை சேர்ந்த தேசிய மீட்புப்படை குழுவினரும் நிகழ்விடத்திற்கு சென்றனர். அனைவரின் சீரிய முயற்சியின்பேரில், சுமார் 18 மணி நேரம் கழித்து, தற்போது குழந்தை பத்திரமாக, நலமுடன் மீட்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குழந்தை நீருவின் தாய் பல மணி நேரமாக தொடர்ந்து அழுதுவருவதால், அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்ததால், அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.