இந்தியா

சிறுநீர் குடிக்க வைத்து, காலணிகளால் மாலை போட்டு - ராஜஸ்தானில் மற்றொரு சாதிய வன்கொடுமை

சிறுநீர் குடிக்க வைத்து, காலணிகளால் மாலை போட்டு - ராஜஸ்தானில் மற்றொரு சாதிய வன்கொடுமை

Abinaya

ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவரை தாக்கி, சிறுநீர் குடிக்க வைத்து, காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது தலித் வன்கொடுமை சம்பவம் இதுவாகும்

38 வயதான பாரத் குமார் என்பவர், மின்சார வேலைகள் செய்து கொடுத்துள்ளார். தான் செய்த வேலைக்காக ஊதியமாக ரூ. 21,100 பில் போட்டுள்ளார். ஆனால் அவருக்கு ரூ.5000 மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19 அன்று, அவர் மீதமுள்ள தொகையைக் கேட்பதற்காக சென்ற போது , இரவு 9 மணி வர சொல்லியுள்ளனர். இரவு 9.10 மணியளவில் அவர் திரும்பிச் சென்றபோது, பணம் கொடுக்காமல் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் பாரத் குமார் போலீசில் புகார் செய்வதாக மிரட்டி உள்ளார்.


இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாரத் குமாரை அங்கிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.  தாக்கும்போது, அவர்கள் கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்தனர். அவர்களில் ஒருவர் வீடியோக்களை உருவாக்கி பின்னர் சமூகவலை தளங்களில் பதிவேற்றினார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவரை தாக்கினர். இந்த தாக்குதலின்போது பாரத் குமாரை சிறுநீர் குடிக்க வைத்தும் துன்புறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு, பின் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது, கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் உட்பட மற்ற விபரங்கள் அதிகாரப்பூரமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக நவம்பர் 7 ஆம் தேதி, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் சூர்சாகர் என்ற பகுதியில், குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்ததற்காக 46வயது தலித் சமூகத்தை சேர்ந்த கிஷன்லால் பீல் என்ற நபர் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினர் பீல்லை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்று அவரது சகோதரர் அசோக் குற்றம் சாட்டினார். பீலின் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினர் நீதி மற்றும் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.