நாடு முழுவதும், நேற்று சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் டோங் மாவட்டத்தில் உள்ள தியோலி - யுனியாரா சட்டசபை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு 2018 மற்றும் 2023 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹரிஷ் சந்திர மீனா, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு கிடைக்காத நரேஷ் மீனா சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால், கட்சி விதிகளை மீறியதாக அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று நரேஷ் மீனா, சமரவதா கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அமித் சவுத்ரியின் சட்டையை பிடித்து இழுத்ததுடன் அவரது கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இருப்பினும் தன் செயலுக்கு காரணம் கூறிய நரேஷ் மீனா, “ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டது. பாஜக வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என அதிகாரிகள் அனைவரும் பணியாற்றுகின்றனர். பாஜவுக்கு ஓட்டுப்போட நெருக்கடி கொடுக்கின்றனர். அமித் சவுத்ரி தவறு செய்ததால்தான் அவரை அறைந்தேன்” என்றார்.
ஆனால் இதுகுறித்த போலீசார் அளித்த விளக்கத்தில், ''குறிப்பிட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களுடன் அமித் சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான் அவரை நரேஷ் மீனா கன்னத்தில் அறைந்தார்” எனத் தெரிவித்தனர்.
சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அமித் சவுத்ரியை அறைந்த விவகாரம் பேசுபொருளானதைத் தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், நரேஷ் மீனா ஆதரவாளர்கள் அவரைக் கைதுசெய்யாத வகையில் சாலைகளை மறித்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வன்முறையில் 8 கார்களும் 12 டூவீலர்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து, நேற்றிரவு நரேஷ் மீனாவைக் கைது செய்வதற்கான முயற்சி தோல்வியுற்றது. அதேநேரத்தில், பாதுகாப்பு படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், இன்று காலை நரேஷ் மீனாவை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர், “நான் சரணடைய மாட்டேன். நான் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலெல்லாம் சப்-க்லெட்ரை தாக்கவில்லை. அரசு அதிகாரிக்கு சாதி கிடையாது. அவர் போலி வாக்காளர்களுக்கு உதவியதால் எனக்கு கோபம் வந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், ஆளும் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். மாநில காவல்துறையின் நம்பகத்தன்மை அழிக்கப்பட்டுவிட்டதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “அவருக்கு (மீனா) இப்படி ஒரு செயலைச் செய்ய தைரியம் எப்படி வந்தது? இது ஒரு சிறிய சம்பவம் அல்ல. மக்கள் மத்தியில் அச்சம் இல்லாதபோது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். இதுதான் இன்றைய மாநிலத்தின் நிலை” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி டோங்க் மாவட்ட ஆட்சியர் சௌமியா ஜா, அமித் சவுத்ரியிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், "அமித் சவுத்ரி தற்போது எங்களுடன் இருக்கிறார். அவரது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து நரேஷ் மீனா கைது செய்யப்பட்டார். பாரதிய நயய் சஹிந்தா மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகள் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டால், அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம்" என்றார்.
இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா, “இந்தச் சம்பவத்துக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுப் பொறுப்பேற்க வேண்டும். கைது செய்யப்பட்ட 60 பேரும் ஒன்றுமறியதாவர்கள். யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் நீங்கள் என்னை தண்டிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டோங்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான், “நரேஷ் மீனா வாக்குச்சாவடிக்குள் நுழைந்து துணை ஆட்சியரை உடல்ரீதியாக தாக்கியுள்ளார். இதனால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்.ஏ.எஸ்) யூனியன், நரேஷ் மீனா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் ஜாட் கரம்சாரி நல சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.