அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷி, கோகினூர் சி.டி.என்.எல். என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் ராஜ் தாக்கரே பங்குதாரராக இருந்தபோது, ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனம் ரூ.450 கோடிக்கு கடன் மற்றும் பங்கு மூதலீடு செய்திருந்தது. இதில் பணமோசடி நடந்ததாக அமலாக்கத்துறை, ஜோஷிக்கு சம்மன் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜரானார். இதேபோல ராஜ் தாக்கரேக்கும், ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே, ’’அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ராஜ்தாக்கரே ஆஜராவார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்’’ என்று நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவகத்தில் ராஜ் தாக்கரே இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.