கடந்த 16 மாதங்களில் மட்டும் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு செயல்படாத/ஊழல் அதிகாரியை களையெடுத்துள்ளது ரயில்வே துறை.
உலகின் மிகப்பெரிய ரயில்வேயில் ஒன்று இந்திய ரயில்வே. ஆனாலும் இந்திய ரயில்வே நிறுவனம் லாபகரமானதாக இயங்கவில்லை என்கிற குறை ஆட்சியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. ரயில்வே துறை சரியாக இயங்காமல் போனதற்கு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் இருப்பது, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் உள்ளிட்ட காரணங்கள் முதன்மையானதாக உள்ளது. இச்சூழலில் தான் இந்திய ரயில்வே துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இயங்கி உள்ளது மத்திய அரசு. ரயிவ்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்றது முதலே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சரியாக வேலை செய்தவர்கள், ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 16 மாதங்களில் மட்டும் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு செயல்படாத அல்லது ஊழல் அதிகாரியை ரயில்வே துறை களை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படிக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 139 அதிகாரிகளுக்குக் கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 38 ஊழியர்கள்/அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக நேற்று (புதன்கிழமை) இரண்டு முக்கிய அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மற்றொருவர் ராஞ்சியில் ரூ. 3 லட்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.