இந்தியா

குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு - 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!

குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு - 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!

webteam

தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென்று ட்வீட் செய்த பெண்ணின் வீட்டிற்கு 20லி பாலை ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது பல பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென்று ட்வீட் செய்த பெண்ணின் வீட்டிற்கு 20லி பாலை ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது

ரேனு குமாரி என்ற பெண் பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். அதில், என்னுடைய மூன்றரை வயது மகனுக்கு
உடல்நிலை சரியில்லை. அவனுக்கு ஆட்டுப்பால், மாட்டுப்பால் ஒவ்வாமையாக உள்ளது. ஒட்டகப்பால் வேண்டும். ஆனால் ஊரடங்கு காரணமாக ஒட்டகப்பால் கிடைக்கவில்லை. அதனால் பாலோ அல்லது பால் பவுடரோ கிடைக்க உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை பலரும் பரப்பினர். இது ஐஏஎஸ் அதிகாரி அருண் போத்ராவின் கண்களிலும் சிக்கியது. உடனடியாக ராஜஸ்தானில் உள்ள ஒட்டகப்பால் பொருட்கள் தொடர்பான உற்பத்தி நிறுவனத்திடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் பாலை கொண்டு சேர்ப்பது எப்படி என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வேயின் உதவி நாடப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் இயங்கி வரும் நிலையில் பாலானது ராஜஸ்தானில் ஏற்றப்பட்டு மும்பையில் உள்ள ரேனு குமாரியிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.