பீகார் ரயில் விபத்து ட்விட்டர்
இந்தியா

பீகார் | ரயில் இன்ஜின் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்... உடல் நசுங்கி பரிதாப மரணம்!

பீகார்: ரயில் பெட்டியையும், இன்ஜினையும் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ரயில்வே ஊழியர், 2 பெட்டிகளின் கப்ளிங்கின் நடுவே சிக்கிக்கொண்டுள்ளார். இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பீகாரில் ரயில் பெட்டியையும், இன்ஜினையும் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ரயில்வே ஊழியர், 2 பெட்டிகளின் கப்ளிங்கின் நடுவே சிக்கிக்கொண்டுள்ளார். இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் ரயில் விபத்து

பீகார் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று லக்னோ - பரௌனி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் - 15204) ரயிலானது, லக்னோவிலிருந்து கிளம்பி, பரௌனி சந்திப்பில் நடைமேடை ஐந்திற்கு சென்றுள்ளது. அப்போது, தனது பணியை செய்வதற்காக, ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் என்பவர் அங்கே சென்றுள்ளார்.

அதன்படி அமர் குமார் ராவ் ரயில் பெட்டிகளையும் இன்ஜினையும் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம் லோகோ பைலட் இன்ஜினை முன்னோக்கி செலுத்தவதற்கு மாறாக தவறுதலாக பின்னோக்கி திருப்பியதால், பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர் ராவ்வின் உடல் கப்ளிங் இரண்டிற்கும் இடையில் சிக்கியுள்ளது.

இதனால், ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் அலற, அவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அப்போது, லோகோ பைலட் கீழே இறங்கி அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும், இன்ஜினை மாற்றவோ, விபத்தை தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதில் சுமார் 2 மணி நேரம் வரை ராவ் சிக்கிய நிலையிலேயே இருந்தார் என்றும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இரண்டிற்கும் இடையில் சிக்கியதில், ஊழியர் ராவ் பரிதாபமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ராவ் உயிரிழந்தது தொடர்பான காட்சிகள் வெளியாக பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

ராவின் மரணத்தை குறிப்பிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “உங்கள் ஆட்சியில் சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் மோடி அவர்களே? நீங்கள் அதானியை பாதுகாப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள். இந்திய ரயில்வேயின் நீண்டகால அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் வேண்டுமென்றே குறைந்த ஆட்சேர்ப்பு ஆகியவற்றின் விளைவைதான் இந்த பயங்கரமான புகைப்படம் மற்றும் செய்தி தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ராவ், லியானவர் சோன்பூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்டேஷனில் பணிபுரியும் போர்ட்டர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.