இந்தியா

தண்ணீர் பாட்டில் சண்டை... ஓடும் ரயிலிலிருந்து பயணியை தள்ளிவிட்ட ரயில்வே ஊழியர்மீது வழக்கு

தண்ணீர் பாட்டில் சண்டை... ஓடும் ரயிலிலிருந்து பயணியை தள்ளிவிட்ட ரயில்வே ஊழியர்மீது வழக்கு

Sinekadhara

உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே உணவக ஊழியர் ஒருவர் ரயில் பயணியை தாக்கி ஓடும் ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியிலுள்ள லலித்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரவி யாதவ்(26) என்ற இளைஞர் தனது சகோதரியுடன் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ்(12591) ரயிலில் சனிக்கிழமை பயணம் செய்துள்ளார். ரயில் ஜிரோலி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ரயில்வே உணவக ஊழியர் ஒருவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியபோது பான் மசாலா துப்பியதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவி யாதவின் சகோதரி லலித்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார். ஆனால் ரயில்வே ஊழியர் ரவி யாதவை கீழே இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளார். மேலும் ரயில்வே ஆட்களை சேர்த்துக்கொண்டு ரவி யாதவை அடித்து தாக்கி ஓடும் ரயிலிலிருந்து தூக்கி ரயில் தண்டவாளத்தில் வெளியே வீசிவிட்டார். இதனைப் பார்த்த உள்ளூர் ஆட்கள் அவரை அவசரமாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரவி யாதவ் கொடுத்த புகாரின்பேரில், ரயில்வே உணவக ஊழியர் மீது இந்திய சட்டப்பிரிவுகளான 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 325 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ரவி யாதவை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட ஊழியர் பெயர் அமித் என்று தெரியவந்துள்ளது. தற்போது மேலும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.