ரயிலில் காத்திருப்போர் பட்டியலே இல்லாமல் அனைவருக்கும் முன்பதிவு டிக்கெட் கிடைக்கும் வகையில், 2027ஆம் ஆண்டுக்குள் புதிதாக 3 ஆயிரம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறையை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான விரிவாக்க திட்டத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக தினசரி இயங்கும்படியான 3 ஆயிரம் ரயில்களை புதிதாக இயக்குவதற்கான பணிகளில் ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
காத்திருப்போர் பட்டியலே இல்லாமல் ரயில் பயணிகள் அனைவரும் முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்கும் வகையில் போதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தாலும் பயணிகள் எண்ணிக்கையின் அதிகரிப்பால் ரயில் சேவைகள் போதுமானதாக இல்லை என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து விடுவதால், ஏராளமான பயணிகள் பொதுப் பெட்டியில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, இப்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 10,748 ரயில் சேவையை 13,000 என அதிகரிக்க ரயில்வே உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்படியாக மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்திற்கு ரயில்வே தயாராகி வருகிறது.