Raigad landslide Twitter
இந்தியா

மகாராஷ்டிரா: ராய்காட் நிலச்சரிவில் புதையுண்டு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு.. 86 பேரின் நிலை?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவுக்கு இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.

Justindurai S

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் பெய்த அதி கனமழையால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.

இதனிடையே ராய்காட் மாவட்டத்தின் கலாப்பூர் பகுதியில் உள்ள இர்சல்வாடி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் புதையுண்டு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பலத்த மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Raigad landslide

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை வரை மீட்பு படையினர் மண்ணில் புதைந்த 22 பேரை பிணமாக மீட்டனர். மேலும் 86 நபர்கள் மண்ணில் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இர்சல்வாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம் ஆகும். சரியான சாலை வசதி இல்லாததால் மீட்பு பணிக்கு பெரிய எந்திரங்களை வரவழைக்க முடியவில்லை. இதனால் மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது. நிலச்சரிவில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு மண் குவிந்து உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை பயன்படுத்தப்படவில்லை.