இந்தியா

ராஜஸ்தானில் ஒற்றுமை யாத்திரையை சுமூகமாக நடத்த முடியுமா?.. ராகுலுக்கு காத்திருக்கும் சவால்!

ராஜஸ்தானில் ஒற்றுமை யாத்திரையை சுமூகமாக நடத்த முடியுமா?.. ராகுலுக்கு காத்திருக்கும் சவால்!

webteam

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் 'பாரத் ஜோடோ' யாத்திரை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நுழையும் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரையை சுமூகமாக நடத்த முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பைலட்டின் ஆதரவாளர்கள் யாத்திரைக்கு சிக்கல்களை ஏற்படுத்துவார்கள் என கருதப்படுகிறது. சச்சின் பைலட் குஜர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி வருவதும் தொடரும் நிலையில், குஜர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் பைன்ஸ்லா ராஜஸ்தானில் பாரத் ஜூடோ யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என எச்சரிக்கை வைத்துள்ளார்.

குஜர் சமுதாயம் நடத்திய பல போராட்டங்கள் வன்முறையில் முடிந்த நிலையில், முதலமைச்சர் அசோக் கேலோட் 'பாரத் ஜோடோ' யாத்திரையை ராஜஸ்தானில் சமூகமாக நடத்துவாரா என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 'குஜர் ஆரக்சன் சமிதி' என அழைக்கப்படும் குஜர் சமுதாய இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் அமைப்பு 'பாரத் ஜோடோ' யாத்திரையை தடுத்து நிறுத்தும் என பைன்ஸ்லா அறிக்கை விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்காக இந்த அமைப்பு போராட்டம் நடத்திய போது ராஜஸ்தானில் சாலைகள் மறிக்கப்பட்டன என்பதும் ரயில்கள் கூட தடுத்து நிறுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. குஜர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக வேண்டும் என சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் பைன்ஸ்லா தனது சமுதாயத்தின் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

கெலாட்-பைலட் மோதல் முடிவுக்கு வராமல் இழுபறியாக உள்ள நிலையில், சமீபத்தில் இந்த கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது. அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பதவியை திறக்க வேண்டும் எனவும் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அளித்த பரிந்துரையை முதலமைச்சரின் கோஷ்டி நிராகரித்தது. கட்சி தலைவர் பதவியை ஏற்றாலும் தானே தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அசோக் கெலாட் அழுத்தம் அளித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மல்லிகார்ஜுன் கர்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி ஆகியோரின் சமாதானத்தை ஏற்று சச்சின் பைலட் ராஜஸ்தான் துணை முதல்வர் பதவி மற்றும் கட்சியின் மாநில தலைவர் பதவி ஆகியவற்றை துறந்த போதிலும், அவருக்கு கட்சியில் வேறு எந்த முக்கிய பொறுப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் முக்கிய பங்கேற்ற பைலட், தற்போது குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அடுத்த வருடம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பைலட்டை முதல்வராக வேண்டும் எனவும் அவர் தலைமையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி அடுத்த வருட சட்டசபைத் தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அசோக் கேலோட் சமீபத்தில் சச்சின் பைலட்டை கடுமையாக விமர்சித்து, அவருக்கு முதல்வர் பதவி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். பைலட் ஒரு துரோகி எனவும் பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசியமாக கைகோர்த்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி செய்தார் எனவும் அசோக் கெலாட் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு துரோகிக்கு எப்படி முதல்வர் பதவியை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால் பாஜகவுடன் பைலட் இணைய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கெலாட் முன் வைத்துள்ள இந்த கடுமையான விமர்சனங்கள், சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக குஜர் சமுதாய தலைவர்களுக்கு, கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. எனவே தான் பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்படும் என குஜர் சமுதாயத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குஜர் சமுதாயம் ராஜஸ்தான் மாநிலத்தில் செல்வாக்குடன் இருந்து வருவதாலும், அந்த சமுதாயத்தின் போராட்டங்கள் பல வன்முறையாக வெடித்தது என்பதாலும், காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் கோஷ்டி மோதலை முடிவுக்கு கொண்டுவர திரைமறைவில் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன் கர்கே மற்றும் பல்வேறு மூத்த தலைவர்கள் இந்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

- புது டெல்லியில் இருந்து கணபதி சுப்ரமணியம்.