இந்தியா

நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்: காங்கிரஸ் முடிவு!

நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்: காங்கிரஸ் முடிவு!

நிவேதா ஜெகராஜா

வரும் 13-ம் தேதி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜராக உள்ளார். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13 ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில தலைவர்கள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், வரும் 13ம் தேதி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன்பு சத்யாகிரக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போராட்டத்தில் டெல்லியை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வரும் திங்கள்கிழமை டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மத்திய அரசை கண்டித்தும், தேசிய புலனாய்வு அமைப்புகளை கண்டித்தும் நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி தலைமை தரப்பிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கும் அமலாக்கதுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.