கோவையில் சமீபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து பிரபல ஹோட்டல் நிறுவனர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர், ”இனிப்புக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது. வெறும் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் ஜாமுடன் பன் வாங்கினால் ஜிஎஸ்டி உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும்” என்று கூறினார். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து நிர்மலா சீதாராமனை ஹோட்டல் நிறுவனர் சந்தித்து வருத்தம் தெரிவித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஹோட்டல் உரிமையாளர், நமது அரசுஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையை கோரும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளைப் பெற முற்படும்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பிரதமர் மோடி.
மக்கள் சொல்வதைக் கேட்டு, ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை இந்த அரசு செயல்படுத்தினால், லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்னைகள் தீரும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: ”எனது துறையில் அனைத்து கோப்புகளும் இந்திக்கு மாற்றப்பட்டுள்ளன” - அமித் ஷா
இதைத்தொடர்ந்து ராகுலின் அணுகுமுறையையும், நிர்மலா சீதாராமனின் செயல்முறையையும் இணையதளங்களில் எடுத்துக்காட்டி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக, ராகுல் காந்தியிடம் சிறுகுறு தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமது நிலைகளை எடுத்துரைத்தார். அதைப் பொறுமையுடன் கேட்ட ராகுல், இதுகுறித்து குரல் கொடுப்பேன் எனவும் உறுதியளித்தார். ஆனால், இந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் செயல்பட்டதாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்த வீடியோவை எடுத்துக்காட்டி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி, கோயம்புத்தூருக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம், சிறுகுறு தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், அவர்களுடைய நிலை குறித்து விவரித்தார். அப்போது பேசிய அவர், ”நான் எனக்காக பேசவில்லை. சிறு குறு தொழில் கூட்டமைப்பின் சார்பாக பேசுகிறேன். நாம் முதலில் ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இந்தியா, தற்சார்பு இந்தியா என தொடங்கி இப்போது நிதி இந்தியாவில் வந்து நிற்கிறோம். வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறோம். ஆனால் நாம் இப்போது எங்கு இருக்கிறோம்? தொழிலதிபர்கள் போராடுகிறார்கள். இந்தியாவில் 7 கோடி தொழில் முனைவோரில் 30 சதவிதத்தினர் இப்போது தொழிலையே விட்டுவிட்டனர். மிக முக்கியமாக சிறு குறு தொழில்முனைவோர்கள். இதனால் 2.1 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர். நாட்டில் 98 சதவிதத்துக்கு சிறு தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். இதற்கென தனி அமைச்சரவை வேண்டும். பெரிய தொழில்நிறுவனங்களுடன் எங்களை சேர்க்க முடியாது. இவர்கள் எல்லாம் சுயமாக தொழில்முனைவர்கள். இப்போது தொழில்முனைவோரை இழந்து வருகிறோம். ஒரு தொழில்முனைவோரால் வெளிப்படையாக அழ முடியாது. ஆனால் அனைவரும் அழுதுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள்" என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பேசிய ராகுல் காந்தி "உங்களது கோரிக்கையை நான் முழுவதுமாக ஏற்கிறேன். சிறுகுறு தொழில்களை பலப்படுத்தாமல் தேசத்தை வலுவாக்க முடியாது. நாங்கள் இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் என்னிடம் உங்களது பிரச்னையை கூறுங்கள். உங்களுடன் இணைந்து பணியாற்ற பிரச்னையை தீர்க்க தயாராக இருக்கிறேன். நிச்சயம் உங்களுக்காக குரல் கொடுப்பேன்" என்றார் அவர்.