அரசியலை எனக்கு கற்றுக்கொடுத்ததால் மோடி மீது எனக்கு அன்பு ஏற்பட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்துள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்றார்.
அங்கு கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் சேலன்ஞ் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் செய்து வருகிறார். மாணவிகள் பல்வேறு நடப்புகள் குறித்து ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் சிறு மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும். நிரவ் மோடிக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வங்கி பணத்தை மத்திய அரசு தந்தது. அவர் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். யாரையும் எவரையும் விசாரிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது. குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே குறிவைத்து சட்டத்தை செலுத்தக்கூடாது.
ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும். அனில் அம்பானி ஒருபோது விமானங்களை தயாரித்தது கிடையாது. எத்தனை முறை பிரதமர் மோடி இதுபோன்று மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். மத்திய அரசில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தடையாக இருப்பது ஊழல். அனைவரும் ஒற்றுமையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். 2004 ஆம் ஆண்டு காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
காஷ்மீர் இளைஞர்களை நாட்டின் மற்ற இளைஞர்களோடு இணைய செல்வதன் மூலம் தீவிரவாதத்தை குறைக்க முடியும். காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும் பாகிஸ்தானை தனிமைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றதில் ஒரு நன்மை இருக்கிறது. அரசியலை எனக்கு கற்றுக்கொடுத்ததால் மோடி மீது எனக்கு அன்பு ஏற்பட்டது” எனப் பேசினார்.