இந்தியா

"தேசிய குடியுரிமை பதிவேடு பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றது"- ராகுல் காந்தி

"தேசிய குடியுரிமை பதிவேடு பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றது"- ராகுல் காந்தி

jagadeesh

தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்‌றது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி‌‌ நிறுவ‌ப்பட்டதன் 135-ஆவது ஆண்டு விழா நாடு முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'அரசமைப்பு சட்டத்தை காப்போம் - இந்தியாவை காப்போம்' என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கொடி அணிவகுப்பு, பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை இரண்டாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று ராகுல் காந்தி விமர்சித்தார். இவையெல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட இரண்டு மடங்கு கடுமையாக மக்களை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பாரத மாதாவை காப்பாற்றுவதாக கூறி பொய்யுரைத்து வருவதாக ராகுல் காந்தி சாடினார். மக்களைப் பிரிப்பதும், வெறுப்பை விதைப்பதுமே பிரதமரின் பணியாக உள்ளது என்றும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.