இந்தியா

“உண்மை வெல்லும் போது மோடி சிறையில் இருப்பார்” - ராகுல்காந்தி பேச்சு

webteam

திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து பேசினார். 

அப்போது “திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர். கருணாநிதி மறையவில்லை. அவர் நம்மை வழிநடத்தி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியில் கருணாநிதி இரண்டற கலந்துள்ளார். கருணாநிதி மறைந்தாலும் அவரது கொள்கை தமிழகத்தை எப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி பிரதமரின் கையில் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். தங்கள் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி. 

பிரதமர் மோடி அரசு மூலம் தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பவர்கள். பிரதமர் மோடி பொய்யை தவிர வேறு எதையும் சொல்வதில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக பிரதமர் கூறினார். ஆனால் இளைஞர்களுக்கு வேலை இல்லை. விவசாயிகளுக்கு எதிர்காலம் இல்லை.

தனது தொழில் வர்த்தக நண்பர்களுக்காகவே பிரதமர் செயல்பட்டு வருகிறார். தொழில் வளத்திற்கான அனைத்து வளங்களும் தமிழகத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 3 மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளின் நிலையை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாக இருக்கும். உண்மையே வெல்லும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். உண்மை வெல்லும் போது மோடி சிறையில் இருப்பார்” எனப் பேசினார்.