இந்தியா

யோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி

யோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி

webteam

சர்வதேச யோகா தினத்தையொட்டி, மோப்ப நாய் பிரிவுடன் இந்திய ராணுவம் யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டு, புதிய இந்தியா என தலைப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. யோகா தினத்தையொட்டி  இந்தியா முழுவதும் நேற்று யோகா செய்யப்பட்டது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லை பாதுகாப்புப் படையின் நாய்கள் பிரிவை சேர்ந்த நாய்களும் அதன் பயிற்சியாளர்களும் யோகா செய்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் நாய்கள் தங்களின் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து யோகா ஆசனங்களை செய்கிறது போல் காட்சிகள் இருந்தன.

அதேபோல இந்திய ராணுவப்படையிலுள்ள நாய்கள் பிரிவிலுள்ள நாய்களும் ராணுவ வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தன. இந்தப் புகைப்படங்கள் இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் ராணுவ வீரர்கள் ஒருபுறமும் நாய்கள் அவர்களுக்கு எதிர்புறமும் இருந்து யோகா செய்வது போல் இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. 

இந்நிலையில் மோப்ப நாய் பிரிவுடன் இந்திய ராணுவம் யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டு, புதிய இந்தியா என தலைப்பிட்டு ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டார். அவரின் பதிவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

ராணுவத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி இப்படி புகைப்படத்தை பதிவிட்டிருப்பதாகவும், எதிர்மறை செய்திகளை பரப்புவதையே ராகுல் வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் இந்திய ராணுவத்தின் பெருமைமிகு உறுப்பினராகவே மோப்ப நாய்கள் விளங்குவதாகவும், அவை நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.