இந்தியா

"இந்தியாவின் பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?"- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

"இந்தியாவின் பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?"- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

webteam

இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை, மத்திய அரசானது அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து “இந்திய பாதுகாப்பு தொடர்பான கருவிகளை, யார் என்றே அறியாத ஒரு நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், எலாரா என்ற சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. எலாரா நிறுவனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஒன்றுமே தெரியாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களின் கட்டுப்பாட்டை எப்படி வழங்க முடியும்? இதன்மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும், “எலாரா மற்றும் அதானி குழுமம் பெங்களூருவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விளம்பரதாரர் நிறுவனமாக உள்ளது. இந்த பாதுகாப்பு நிறுவனம் 2003 இல் நிறுவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இது நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே அதானி குழும முறைகேடு விவகாரத்தில், கூட்டு நாடாளுமன்ற குழுவின் விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் அமளி நீடித்து வருகிறது.

இதனிடையே இது தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இது போன்ற பிரச்னைகளுக்கே விடை தெரியாத நிலையில், இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தம் அதானி நிறுவனம் மற்றும் யாரென்றே தெரியாத எலாரா நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்?” என ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.