கங்கனா ரனாவத், ராகுல் காந்தி எக்ஸ் தளம்
இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி.. பதிலளித்த கங்கனா ரனாவத்!

ஹிண்டன்பர்க்கின் அறிக்கை விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, பாஜக எம்பி கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், சமீபத்தில் அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டது. அதில், ‘அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் (Madhabi Puri buch) தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தார்’ எனத் தெரிவித்திருந்தது.

அதானி

இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அதானி குழுமம் மற்றும் செபி ஆகியன மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் செபி குழுமத் தலைவர் விரிவான விளக்கமும் அளித்திருந்தார். ஆனால், அதை ஏற்காத ஹிண்டன்பர்க் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இது, மேலும் விவாதத்தை எழுப்பியது.

இதையும் படிக்க: தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு எருமை மாடு பரிசு.. யார் வழங்கியது? சுவாரசியமான பின்னணி!

இந்த விலையில் ஹிண்டன்பர்க்கின் அறிக்கை விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்தை இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எனது கடமை. செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

பிரதமர் மோடியோ... செபி தலைவரோ அல்லது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமோ தாமாக முன்வந்து விசாரிக்குமா? நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்கு ஆளாகியுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க; மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா இணைந்து பேசிய வீடியோ வைரல்.. திருமணம் செய்ய முடிவா? உண்மை என்ன?

ராகுல் காந்தியின் இந்த வீடியோ பதிவுக்கு இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுக்கரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது. நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது.

இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார். நீங்கள் (ராகுல் காந்தி) வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் கங்கனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை மற்றும் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி ராகுல் காந்தி இருப்பதுபோன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்கு கீழே ‘யாருடைய சாதியையும் கேட்காமல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த விரும்புபவர்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் கங்கனா அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது பெரும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா, கங்கனா மீது ரூ.40 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் கங்கனா, ராகுல் காந்தியைச் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து பதிவிட்டு சீண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘மயில் கறி சமைப்பது எப்படி?’ - வீடியோ வெளியிட்ட தெலங்கானா யூடியூபர் மீது வழக்குப்பதிவு!