கடிதம் எழுதிய எதிர்க்கட்சி தலைவர்  முகநூல்
இந்தியா

அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள்; சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி!

PT WEB

நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்தினார் ராகுல்காந்தி. அதன்பிறகு அவரது பேச்சின் பல்வேறு பகுதிகளை நீக்க வேண்டும் என மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றை பரிசீலித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல்காந்தியின் பேச்சில் பல்வேறு பகுதிகளையும் நீக்க நேற்று உத்தரவிட்டிருந்தார்.

குறிப்பாக பாரதிய ஜனதா அளித்த மனுவையடுத்து அக்னிவீர் திட்டம் குறித்து ராகுல்காந்தி பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் குறித்து பேசியதும் நீக்கப்பட்டுள்ளது. போலவே இந்துக்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் என்று ஆரம்பித்து ராகுல்காந்தி பேசியதும், நீட் விவகாரம் குறித்து பேசிய பகுதிகளும் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதனால் நேற்றைய தினம் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி தனது உரையிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ள கடிதத்தில், “மோடியின் உலகத்தில் உண்மைக்கு இடமில்லை என பொருள்படும்படியும், மக்களவை குறிப்பிலிருந்து எதை நீக்கினாலும் உண்மை உண்மையே. மக்களின் பிரச்னைகளைத்தான் மக்களவையில் நான் பேசினேன். சபாநாயகருக்கு மக்களவை உறுப்பினர்களின் பேச்சுகளின் பகுதியை நீக்க உரிமை இருந்தாலும், எனது உரையிலிருந்து நீக்கப்பட்ட பல பகுதிகள் விதி எண் 350 கீழ் வரவில்லை.” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.