ராகுல் காந்தி Twitter
இந்தியா

“மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்”- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

இன்று மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “பிரதமர் ஏன் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பேசவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

ஜெ.நிவேதா

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் தொடங்கியது. விவாதத்தில் முதலில் ராகுல் பேசுவார் என சொல்லப்பட்டது. ஆனால் கௌரவ் கோகோய்தான் (காங்.) முதலில் பேசினார். மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதால், வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை பேசவைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாகவும், அதனாலேயே கௌரவ் கோகோய் பேச வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவர், அசாம் மாநில காங். எம்.பியாவார். விவாதத்தின் மீது எந்தெந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளனர் என்ற பட்டியலும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

கௌரவ் கோகோய்

இந்நிலையில் இன்று மத்திய அரசுக்கு மீதான 2-ம் நாள் விவாவத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். பதவி நீக்கம் ரத்துக்குப்பின் ராகுல் காந்தி முதன்முறையாக இன்று அவையில் உரையாற்றினார். உரையின்போது ராகுல் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள், இங்கே:

பாஜகவினர் அச்சப்பட வேண்டாம்!

“எம்.பி தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி. இன்று நான் மணிப்பூர் பற்றியே பேசுவேன். அதானி பற்றி நான் பேச மாட்டேன். ஆகவே பாஜக-வினர் அச்சப்பட வேண்டாம். நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நான் என் மனதில் இருந்துதான் பேசுகிறேன். இதயத்தில் இருந்துவரும் வார்த்தைகள், இதயத்திற்கே செல்லும்.

rahul gandhi

நான் 130 நாட்கள் ‘ஒற்றுமை இந்தியா’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டேன். இந்த யாத்திரை என்னை மாற்றியது. யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக செல்கின்றீர்கள் என மக்கள் என்னிடம் கேட்டார்கள். அன்பை செலுத்தவே நடைபயணம் மேற்கொண்டிருப்பதை பின்னர் புரிந்துகொண்டேன். நடைபயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன். அவர்களின் வலியை பிரதிபலிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. என்னுடைய இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்னும் நிறைவடையவில்லை.

rahul gandhi

நான் பேசத் தொட்ங்கிய உடன் சிலர் வெறுப்புடன் கோஷமிட்டனர். வெறுப்புணர்வை நீக்க வேண்டும் என முடிவெடுத்து மனதில் அன்பை நிறைத்து வைத்துள்ளேன்.

பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்!

பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார். தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? இந்தியாவின் ஒருபகுதியாக, ஒரு மாநிலமாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை. மத்திய அரசு, தனது செயல்களால் இந்தியாவிலிருந்து மணிப்பூரையே பிரித்துவிட்டீர்கள்.

rahul gandhi

ஒரு தாய் இங்கே இருக்கிறார்; மற்றொரு தாய் மணிப்பூரில் இருக்கிறார். அவரை கொன்றுவிட்டீர்கள். ஆம், பாரத மாதாவையே கொன்றுவீட்டீர்கள். மணிப்பூரை போலவே, இந்தியாவையும் கொலை செய்துவிட்டீர்கள். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் பேசவில்லை.

மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் நான் பேசினேன். அவர்களின் கதை கொடூரமானது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரேநாளில் அமைதியை கொண்டுவரலாம்.

ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார் - ராகுல் காந்தி

ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். மோடியும், அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார். அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை” என்றார் மிகக்கடுமையாக.