Rahul Gandhi in Parliament as MP Puthiya thalaimurai
இந்தியா

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக வந்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் கீழ் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்ததை தொடர்ந்து, தற்போது அவருக்கு எம்.பி பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

webteam

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.

சூரத் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

எதற்காக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி

ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது ராகுல் தரப்பு உச்சநீதிமன்றத்தில், “ஒரு அவதூறு வழக்குக்காக 8 ஆண்டுகள் வரை குரல் கொடுக்காமல் இருக்க வேண்டுமா? ராகுலுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பாஜகவினரால் தாக்கல் செய்யப்பட்டது” என்று வாதிடப்பட்டது.

Rahul Gandhi

இதையடுத்து உச்சநீதிமன்றம், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் தகுதி நீக்கம் தொடர்பான விதிகள் பொருந்தியிருக்காது. ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி சூரத் நீதிமன்ற நீதிபதி விளக்கம் தர வேண்டும்” என உத்தரவிட்டது. கடந்த வாரம் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

மீண்டும் வழங்கப்பட்ட எம்பி பதவி! விதிக்கப்பட்ட தகுதிநீக்கம் ரத்து!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார் என்றும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களும் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் தற்போது ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்துள்ள மக்களவைச் செயலகம், ராகுல் மீண்டும் எம்பி யாக செயல்படுவார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களவைச் செயலகம்

மக்களவைச் செயலகம் வெளியிட்டிருக்கும் கடிதத்தின் படி, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரளாவின் வயநாடு தொகுதியின் லோக்சபா உறுப்பினராக இருந்தவந்த ராகுல் காந்தி, அந்த பதவியில் தொடர்ச்சியாக செயல்படுவார். அவர் செயல்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தகுதிநீக்க உத்தரவு தற்போது நீக்கப்படுகிறது. அதன்படி இன்றிலிருந்து ராகுல்காந்தி எம்.பி.யாக தொடராலாம்” என தெரியவருகிறது. இதனால் இன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வருகை தந்தார் ராகுல்காந்தி.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்த நிலையில், ராகுல்காந்தி வந்த சில நிமிடங்களிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.