ராகுல் காந்தி, சங்கராச்சார்யா அவிமுக்தேஷ்வர்னந்த் சரஸ்வதி எக்ஸ் தளம்
இந்தியா

”இந்து மதத்தை ராகுல் அவமதிக்கவில்லை” - மக்களவையில் ஆற்றிய உரை குறித்து அவிமுக்தேஷ்வர்னந்த் சரஸ்வதி!

Prakash J

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, கடந்த ஜூலை 1ஆம் தேதி உரையாற்றினார். அப்போது அவர், ”தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எப்போதும் வன்முறை, வெறுப்பு மற்றும் பொய் புரட்டுகளையே பரப்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்துக்களாகவே இருக்க முடியாது” எனச் சாடினார். ராகுலின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாக பிரதமர் மோடி, “ராகுலின் பேச்சு இந்து சமூகம் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல்காந்தி முயற்சிக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர்கள் அமித் ஷாவும், ராஜ்நாத் சிங்கும் ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பிரதமர் மோடி பேசிய உடனேயே, “பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துக்களின் பிரதிநிதி கிடையாது” என்று பதில் அளித்தார்.

இதையும் படிக்க: கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குதான்!

இந்த நிலையில், ராகுல் காந்தி மக்களவையில் பேசிய பேச்சு குறித்து உத்தரகாண்ட் ஜோதிர்மடத்தின் சங்கராச்சார்யா அவிமுக்தேஷ்வர்னந்த் சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி இந்து மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்பட்ட உரையை நான் ஆராய்ந்தேன். அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை. இந்து மதத்தில் வன்முறைக்கு இடமில்லை.

அவர் அப்படிச் சொன்னால், அவரது பேச்சைத் திரித்து, சூழலுக்கு அப்பாற்பட்ட வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பரப்புவது குற்றமாகும். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழுமையடையாத கோயிலை கும்பாபிஷேகம் செய்வது இந்து மத சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று கூறி, கடந்த ஜனவரி மாதம், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி பங்கேற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அசாம்: முக்கிய நதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டிய வெள்ளம்.. சுமார் 24 லட்சம் பேர் பாதிப்பு

இதையும் படிக்க: பாஜக, இந்து என குறிப்பிட்டு பேசிய ராகுல்; இந்துக்கள் மீதான தாக்குதல் என அமளியில் ஈடுபடும் பாஜக!