மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்று இருக்கிறது.
2ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2வது முறையாக களமிறங்கி உள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்துக்கு அதிக எம்.பி.
க்களை அனுப்பும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் நேரு குடும்பத்தினரின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது பேசுபொருளானது.
உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சியான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், கண்ணோஜ் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், சமாஜ்வாடி தொகுதிகளை பிரித்துக்கொண்ட நிலையில், காங்கிரஸ் தனது முக்கிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என மக்கள் ஆசைப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்பி உள்ளனர்.
தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியை வெல்ல வைத்த தொகுதியான அமேதி, ராகுல்காந்தியை மூன்று முறையும், அவரது தாய் சோனியா காந்தியை ஒருமுறையும் அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது.
தற்போது, 4வது முறையாக, ராகுல்காந்தி அங்கு களமிறங்க உள்ளார். கேரளாவில் ராகுலுக்கு இருக்கும் வரவேற்பை சிதறவிடக் கூடாது என்பதால், வயநாடு வாக்குப் பதிவுக்கு பிறகு, அமேதி தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பு வெளியாக உள்ளது.
அதேநேரம், பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி வெற்றிபெற்ற ரேபரேலி தொகுதியில், பேத்தி பிரியங்கா காந்தி களமிறக்கப்பட உள்ளார். பிரியங்காவின் தாய் சோனியா
காந்தியை தொடர்ந்து 5 முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது ரேபரேலி தொகுதிதான் என்பதால், பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடுவது சரியாக இருக்கும் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.