இந்தியா

பெட்ரோல் விலையை குறைக்க முடியுமா? - மோடியை கேள்வி கேட்கும் ராகுல்காந்தி

பெட்ரோல் விலையை குறைக்க முடியுமா? - மோடியை கேள்வி கேட்கும் ராகுல்காந்தி

webteam

மத்தியபிரதேச காங்கிரஸில் முக்கிய நபராக இடம்பெற்றிருந்த ஜோதிராதித்ய சிந்தியா, நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமாக்களை இதுவரை சபாநாயகர் ஏற்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த 4 சுயேச்சைகள் பங்கேற்றனர். அதேநேரத்தில், ஆட்சிக்கு ஆதரவு அளித்த இரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சமாஜ்வாதி எம்.எல்.ஏ. பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்துக்குப் பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட்டனர். பாஜக தனது எம்.எல்.ஏ.க்களை, ஹரியானா மாநிலம் குருகிராமுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் ராகுல்காந்தி பிரதமர் மோடியை குறிப்பிட்டு ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல் விலையை உங்களால் குறைக்க முடியுமா மோடி என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் நீங்கள் மும்முரமாக இருந்த வேளையில் கச்சா எண்ணெய் விலை 35% சரிந்ததை கவனிக்க தவறிவிட்டீர்கள்; இந்தியர்கள் நலனுக்காக பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கு கீழ் கொண்டுவர உங்களால் முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்த நிலையில், கச்சா எண்ணெய்யின் தேவையைக் காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.