இந்தியா

“கடும் விளைவுகள் ஏற்படக்கூடும்” - மவுனம் கலைத்த ராகுல்காந்தி 

“கடும் விளைவுகள் ஏற்படக்கூடும்” - மவுனம் கலைத்த ராகுல்காந்தி 

webteam

ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

370 பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை எதிப்பு தெரிவிக்கவில்லை எனக்கூறி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்  “ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்திருப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல். இந்திய அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பு மேம்படாது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது நாட்டில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியா என்பது அதன் மக்களால் உருவாக்கப்பட்டது. நிலத்தால் உருவாக்கப்படவில்லை. மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால் நாட்டின் பாதுகாப்பில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.